பஞ்சபூதத் தலங்களில் நில தலம் - காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் !!

 

சிவபெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில் காட்சி தரும் தலங்களை பஞ்சபூதத் தலங்கள் என்கிறோம். பஞ்சபூதங்களில் நிலமாக சிவபெருமான் அருள்புரியும் தலம் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வர்) கோவில் ஆகும். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரத்தில் பாடப்பட்ட தலம் இது. இது காஞ்சிபுரத்தில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகும். 40 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கோவில் வளாகத்தில் சிவன் ஏகாம்பரேஸ்வரர் ,ஏகாம்பரநாதர் ,ராஜலிங்கேஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். அவரது துணைவியார் பார்வதி ஏலவர்குழலியாக சித்தரிக்கப்படுகிறார். மேலும் லிங்கத்தால் பிருத்வி லிங்கமாக குறிப்பிடப்படுகிறார் . நான்கு புறங்களிலும் நான்கு வகை சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய மாமரம், ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் தலவிருட்சமாகும்.

 

 தல வரலாறு :

 

கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் தன் கைகளால் விளையாட்டாக மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும்.  பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.

 

சிவனின் மனைவியான பார்வதி, வேகவதி நதிக்கு அருகில் உள்ள ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள் அவளுடைய பக்தியை சோதிக்க, சிவன் அவள் மீது நெருப்பை அனுப்பினார். பார்வதி விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தார். விஷ்ணு சந்திரனை அழைத்து வந்தார், அதன் கதிர்கள் மரத்தையும் பார்வதியையும் குளிர்வித்தன. பார்வதியின் தவத்தை சீர்குலைக்க சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் ஏகாம்பரேஸ்வராகத் ("மாமரத்தின் இறைவன்") தோன்றி திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு “தழுவக்குழைந்த நாதர்” என்ற பெயரும் இருக்கிறது.

 

தல பெருமை:

 

  • பஞ்சபூதத் தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

  • காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.

  • இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர்.

  • சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

  • தை மாத ரத சப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

 

  • ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது “திருமணக்கோலம்” என்கிறார்கள். அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ் காட்சி தந்து மணம் முடித்தாராம்.. இதனை “வேத மாமரம்” என்றும் அழைப்பர்.

  • இத் தெய்வீக மாமரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் புனிதமான மரம் ஆகும். ஏகாம்பரநாதர் தல விருட்சமான மாமரத்தின் நான்கு கிளைகள் ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கு  வேதங்களை கிளைகளாகக் கொண்டு இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகை சுவைகளைக் கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை உண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

  • இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

 

கோவில் கட்டிடக்கலை:

 

இந்த பழமையான கோவில் குறைந்தது கி.பி 600 முதல் உள்ளது. இது, பல்வேறு மன்னர்களால் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. பல்லவர்கள் ஆரம்பத்தில் இந்த கோவிலைக் கட்டினார்கள். இது இடிக்கப்பட்டு சோழ மன்னர்களால் மீண்டும் கட்டப்பட்டது. அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோவில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்

  • நான்கு மிகப்பெரிய நுழைவாயில் கோபுரங்கள் உள்ளது. 11 மாடிகள் மற்றும் 192 அடி உயரம் கொண்ட தெற்கு கோபுரம் இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரங்களில் ஒன்றாகும் .58 மீட்டர் உயரமுள்ள இந்த கோவில் கோபுரம் காஞ்சிபுரம் நகரம் முழுவதிலும் உள்ள முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும்.

  • மற்றொரு சிறந்த கட்டிடக்கலை காட்சி 1000 தூண்களைக் கொண்ட மண்டபம். 6 ஆம் நூற்றாண்டின் முக்கிய சைவக் கவிஞர்களான 63 நாயன்மார்களின் உருவங்களையும் சிலைகளையும் அங்கு காணலாம்.

  • விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் தூண் மண்டபம் போன்ற பல கட்டிடக்கலை அதிசயங்கள் இந்த பண்டைய கோவிலுடன் தொடர்புடையவை.

  • கோவிலின் உள் பிரகாரத்தில் பத்து தூண்கள் உள்ளன, அவற்றை தட்டினால், வெவ்வேறு இசை ஒலிகளை உருவாக்குகின்றன.

  • கோவிலின் கூரையில் 12 ராசிகளும் உள்ளன. ஜாதகக் குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகளைப் போக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

  • குபேரனின் சிலை பக்தர்களுக்கு செல்வத்தை அளிப்பதாக நம்பப்படுகிறது.

  • சிவகங்கை மற்றும் கம்ப நாடி என்று அழைக்கப்படும் இரண்டு அழகான நீர்த்தேக்கங்கள் உள்ளன. சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு ஒரே சன்னதி. இந்த சன்னதியில் சோமாஸ்கந்த பலகை உள்ளது, இதில் சிவன் தனது துணைவியார் பார்வதியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

  • விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனி சன்னதி உள்ளது,  . விஷ்ணு வாமன மூர்த்தியாக வணங்கப்படுகிறார். 

 

திருவிழா

 

பங்குனி உத்திரம் பெருவிழா 13 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவர் பௌர்ணமி, அமாவாசை, பிரதோச நாட்களில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் 

 

திறக்கும் நேரம்: 

 

கோவில் காலை 06:00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08:30 மணி வரை திறந்திருக்கும்.

 

        ஏகாம்பரேஸ்வரரின் தெய்வீகம் கட்டிடக் கலையின் அழகு, வரலாறு மற்றும் கோவிலின் புனித சாராம்சம் ஆகியவை இந்தியாவின் ஏழு மிக முக்கியமான யாத்திரை மையங்களாக இதை மாற்றியுள்ளது.

 

"ஆன்மீகச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் மிளிரும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், ஆன்மிக ஆர்வலர்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய தலமாகும்.

editorimg

Leave a Comment

Comments

No comments yet. Be the first to comment!

Archives